கரீம்நகர்: தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய ஓட்டல் நேற்று (16ஆம் தேதி) திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2-30 மணிக்கு மேல் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்றும்; பிரியாணி வாங்க வருபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து இருந்தது.
மேலும் ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தன. விளம்பரத்தைக் கண்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பிரியாணியை வாங்கி சாப்பிட்டே தீர வேண்டும் என எண்ணி, சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டல் முன்பு உள்ள சாலையில் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பிரியாணிக்கு ஆசைப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த கடை முன்பு திரண்டனர். இதன்காரணமாக, அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார், உடனடியாக குறிப்பிட்ட ஹோட்டல் இருக்கும் பகுதிக்கு விரைந்தனர்.
பிரியாணி வாங்க வந்தவர்கள், தங்களது வாகனங்களை, அந்த சாலையில், சரியாக, சீராக நிறுத்தாததன் காரணத்தினாலேயே, இந்தப் போக்குவரத்து நெரிசல் என்பதை அறிந்த போலீசார், அங்கு வாகனம் நிறுத்தி இருந்த வாகன ஓட்டிகளிடம், 100 ரூபாய் அபராதமாக விதித்தனர். 1 ரூபாய் பிரியாணிக்கு ஆசைப்பட்டு, 100 ரூபாய் இழந்த சம்பவம், பிரியாணி பிரியர்களிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.