ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியத் தலைவர் வஹீத் பார்ராவை தேசிய புலனாய்வு முகமை கைது செய்து, 15 நாட்கள் சிறையில் வைத்து விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த கைது நடவடிக்கையின் முக்கியக்காரணமாக, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஹிஜ்புல் முஜாகிதீனுக்கு ஆதரவாக வஹீத் பார்ரா பேசியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கைதான இர்ஃபான் ஷஃபி மிர், இடைநீக்கம் செய்யப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தாவிந்தர் சிங் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகி வந்ததால், பார்ரா ஜம்முவிற்குக் கொண்டு செல்லப்பட்டு தேசிய புலனாய்வு முகமையின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 25ஆம் தேதி நடந்த பார்ராவின் கைதுக்குப் பின், தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், பார்ராவை அடுத்தநாள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின்னரே, ஜம்முவில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.