ஹைதராபாத்:பேடிஎம் நிறுவனம் இந்தியாவின் முன்னணி பேமென்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது. புத்தாண்டு நெருங்கி வரும் சமயத்தில் நிறுவனம் தங்களுக்கு அன்பளிப்பு ஏதாவது வழங்கும் என ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
50 ஆயிரத்திற்கும் குறைவான கடன்களை வழங்குவது, பொருட்களை வாங்கி விட்டு பணத்தைப் பின்னர் செலுத்துவது (buy now pay later) போன்ற சேவைகளை பேடிஎம் வழங்கி வந்த நிலையில், வழிகாட்டி நெறிமுறைகள் மாற்றப்பட்டதால் பேடிஎம் தனது கவனத்தை நிதி மேலாண்மை மற்றும் காப்பீடு மீது செலுத்தியது.
இந்நிலையில், சமீபத்தில் ஏஐ அடைந்து வரும் அபரீதமான வளர்ச்சியின் காரணமாகப் பல நிறுவனங்களும் ஊழியர்களைக் குறைத்து விட்டு ஏஐ தொழிநுட்பங்களை சார்ந்திருக்கும் என கூறப்பட்டு வந்தது. வளர்ச்சி அடைந்த, பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நாடுகளில் முதலில் இந்த நிலை வரும் என கருதப்பட்ட நிலையில் இந்தியாவில் துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்திலேயே அத்தகைய நிலை வந்துள்ளது.
பேடிஎம் சில காலங்களாகவே ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் ஒரே மாதிரியான வேலையை ஏஐ மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதில், அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பேடிஎம் நிறுவனம் பங்குச்சந்தையிலும் லிஸ்ட் செய்யப்பட்டு இருப்பதால் எதிர்பார்க்கும் முதலீட்டைத் திரட்டுவதற்கு லாபம் ஈட்ட வேண்டியது அவசியமாகியுள்ளது.