ராஜமகேந்திரவரம் (ஆந்திரா): ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை, இன்று (செப் 14) நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பவன் கல்யாண், வரக்கூடிய தேர்தல்களில் ஜனசேனா - தெலுங்கு தேசம் கட்சி இணைந்து போட்டியிடும் என கூறினார். இது குறித்து பவன் கல்யாண் மேலும் கூறுகையில், “ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியால் ஆந்திரப்பிரதேசம் தாங்காது, எனவே, நான் இன்று ஒரு முடிவு எடுத்து உள்ளேன்.
வரக்கூடிய அடுத்த தேர்தல்களில் ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இணைந்து போட்டியிடும். ஜெகனின் (ஆந்திர முதலமைச்சர்) நிர்வாகம் நன்றாக இருந்திருந்தால், நானும், பாலகிருஷ்ணா மற்றும் லோகேஷ் ஆகியோரும் அரசியல் ரீதியாக சந்திக்கத் தேவை இல்லாமல் இருந்திருக்கும். சந்திரபாபு கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கல் மட்டுமே.
அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது. சந்திரபாபு மீது சட்ட விரோத வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பியது வருத்தம் அளிக்கிறது. கொள்கை முடிவுகளில் இருவருக்கும் உள்ள கருத்துகள் வேறுபடலாம். தெலுங்கு தேசம் - ஜனசேனா போராட்டத்தில் பாஜகவும் இணையும் என நம்பலாம்.
யார் வந்தாலும் அல்லது சென்றாலும், தெலுங்கு தேசம் - ஜனசேனா அடுத்த தேர்தல்களில் இணைந்தே போட்டியிடும். ஜெகனை நம்பினால் நாய் வாலைப் பிடித்து கோதாரியில் நீந்துவது போன்று ஆகிவிடும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். காவல் துறை இப்படி அடிமையாக இருந்தால், பொதுமக்கள்தான் பொறுப்பை எடுக்க வேண்டும். ஜெகனை நம்பிய வைகபா தலைவர்களே, உங்களது எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள்” என தெரிவித்தார்.