கோட்டா: ராஜஸ்தானில் உள்ள கோட்டா மருத்துவக் கல்லூரியில் நேற்றைய முன்தினம் (ஜூலை 12) இரவு குறைந்த மின்னழுத்தம் (short circuit) காரணமாக ஆக்ஸிஜன் மாஸ்க் தீப்பிடித்து எரிந்ததில் அனந்தபுராவைச் சேர்ந்த வைபவ் சர்மா என்பவர் உடல் கருகி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
உயிரிழந்த வைபவ் சர்மா குடல் வெடிப்பு காரணமாக ஐந்து நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வைபவ் சர்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஜூலை 12ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வைபவ் சர்மாவின் உடல் நிலை மோசமடைந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் கொடுத்து உயிர்ப்பிக்க முயன்றுள்ளனர். சிபிஆர் சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சுவிட்ச் போர்டு தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும், வைபவ் சர்மா அணிந்திருந்த ஆக்ஸிஜன் முகக்கவசம் சுவிட்ச் போர்டுடன் இணைக்கப்பட்டிருந்ததால் ஆக்ஸிஜன் முகக்கவசத்திலும் தீ பரவியதாகவும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வைபவ் சர்மா உடல் கருகி உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.