வாரணாசி : உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் சாலையில் சுற்றித் திரிந்த இரண்டு தெரு நாய்களை வெளிநாட்டினர் தத்தெடுத்த நிலையில், சிறப்பு பாஸ்போர்ட் மூலம் இரு நாய்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செல்கின்றன.
வாரணாசி நகர வீதிகளில் சுற்றித்திரியும் இரண்டு நாய்களின் பெயர் மோதி, மற்றும் ஜெயா. அண்மையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வீரா லஸ்செரட்டி என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த மிரெல் பொண்டன் பெல் ஆகிய இரண்டு பேரும் காசிக்கு சுற்றுலா வந்து உள்ளனர். காசி நகர வீதிகளில் சுற்றித் திரிந்த நாய்களை இருவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து உள்ளனர்.
அப்போது இரண்டு நாய்களை மற்ற தெரு நாய்கள் அனைத்தும் விரட்டிச் செல்வதை இருவரும் பார்த்து உள்ளனர். மற்ற தெரு நாய்களிடம் இருந்து இரண்டு நாய்களை, இரண்டு சுற்றுலா பயணிகளும் மீட்டு உள்ளனர். இரண்டு நாய்களையும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்துப் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தெரு நாய்கள் இரண்டையும் தத்தெடுக்க இருவரும் முடிவு செய்து உள்ளனர். தொடர்ந்து வாரணாசியின் விலங்கு பராமரிப்பு அறக்கட்டளையை அணுகிய சுற்றுலாப் பயணிகள், தெரு நாய்களிடம் இருந்து மீட்கப்பட்ட மோதி மற்றும் ஜெயா ஆகிய இரண்டு நாய்களையும் தத்தெடுப்பது குறித்த பணிகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரண்டு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. மேலும், இரண்டு நாய்களின் ரத்த மாதிரிகளும் போர்சுகலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. விமான நிலையத்தில் நாய்களை அடையாளம் காண நாய்களின் தகவல் அடங்கிய மைக்ரோசிப்பை விலங்கு நல அறக்கட்டளை ஊழியர்கள் நாய்களுக்குச் செலுத்தினர்.
விமான நிலையத்தில் நாய்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக அதன் தகவல்கள் அடங்கிய 15 இலக்க எண் கொண்ட மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்ல ஏதுவாக நாய்களுக்கு சிறப்பு பாஸ்போர்ட்கள் எடுக்கப்பட்டு உள்ளன.
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மோதி மற்றும் ஜெயா ஆகியோர் நெதர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்குச் செல்ல உள்ளதாக வாரணாசி விலங்குகள் நல அறக்கட்டளை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மோதி மற்றும் ஜெயா ஆகிய இரண்டு தெரு நாய்களும் விமானத்தில் ஏதுவாக செல்ல சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பிறந்து சாலைகளில் சுற்றித் திரிந்த இரண்டு தெரு நாய்கள், வெளிநாட்டினரின் கண்களில் தென்பட்டு, அவர்களால் தத்தெடுக்கப்பட்டு நெதர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்குச் செல்லும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க :தப்பியது ஏக்நாத் ஷிண்டேவின் CM பதவி - அவசரப்பட்டு கோட்டைவிட்ட உத்தவ் தாக்ரே!