பெங்களூருவிலிருந்து டெல்லிக்குச் சென்ற i5-722 ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், நடுவானில் ஆடைகளைக் கழற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் அந்நபர் விமானத்திலிருந்த பணிப்பெண்ணிடம் தனக்கு இத்தாலிய முத்தம் தருமாறு கேட்டு அடம்பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விமானக் குழுவினர், அவரை அமைதியாக அமரும்படி வலியுறுத்தினர். பின்னர், அவர் மதுபானம் அல்லது போதைப் பொருள் உட்கொண்டுள்ளாரா என்றும் சோதனை நடத்தினர்.
சிறிது நேரம் கழித்து, அந்நபரை பார்வையிட பணிப்பெண் சென்றுள்ளார். அப்போது ஆடைகளைக் கழற்றிவிட்டு அந்நபர் நிர்வாணமாக இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். இதைப் பார்த்து திக்குமுக்காடிப் போன அப்பெண், உடனடியாக ஆடைகளை அணியும்படி அந்நபரிடம் அறிவுறுத்தியுள்ளார். பேச்சைக் கேட்பது போலவே ஆடைகளை அணிந்த நபர், மீண்டும் கழற்றிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, டெல்லி விமான நிலைய ஊழியர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விமானம் டெல்லியில் தரையிறங்கியதுமே, விமான நிலைய காவல் துறையினரும் ஊழியர்களும் வந்து விசாரித்துள்ளனர். அவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பயணி, அவர்கள் முன்னிலையிலேயே தனது லேப்டாப்பை உடைத்துவிட்டு, மீண்டும் ஆடைகளைக் கழற்றிவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.