டெல்லி: பகுதி நேர சூரிய கிரகணம் 2022 இன்று (அக்டோபர் 25) (1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3ஆம் நாள்) நிகழ உள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா நாடுகள், வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்த கிரகணம் தென்படும். இந்தியாவில் சூரிய கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கி பெரும்பாலான இடங்களில் காட்சியளிக்கும். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது.
கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் இது குறைவாகவே காணப்படும்.கிரகணத்தின் உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும்.
தமிழ்நாட்டின் சென்னையில் மாலை 5.14 மணி முதல் 5.45 மணி வரை 30 நிமிடங்கள் நிகழும், மதுரையில் மாலை 5.24 மணி முதல் 5.53 மணி வரை 31 நிமிடங்கள் வரை நிகழும். இந்த கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரியனின் பெரும்பகுதியை சந்திரன் மறைத்தாலும் அது கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.