டெல்லி :விமான டிக்கெட்டுகளின் அதிகபட்ச விலை வரம்பு நிர்ணயம் செய்வது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு நாளை (ஏப். 5) ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் விமான டிக்கெட்டுகளின் அதிகபட்ச விலை உயர்வு, சில குறிப்பிட்ட வழித் தடங்களில் அபரிவிதமான டிக்கெட் விலை உயர்வு உள்ளிட்ட கருத்துகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், தனியார் விமான நிலைய இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிக்கெட் விலை நிர்ணயம் தொடர்பான கருத்துகளை தெரிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கால்ந்து கண்டு தனியார் விமான நிறுவனங்களுக்கான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலை வரம்பு நிர்ணயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக விமான டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் வளைகுடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவும், திரும்பவும் உச்சபட்ச விமான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுவதால் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் நிதி பிரச்சினைகளுக்கு ஆளாவதாக கூறினார்.
திருவிழா மற்றும் பயணங்களுக்கான உச்சபட்ச நேரத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு டிக்கெட் விலை அதிகரித்து விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன் கடிதத்தில் தெரிவித்து இருந்தார். சில நேரங்களில் குறிப்பிடத்தக்க விமான சேவைகள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் அந்த விமானத்தை எதிர்பார்த்து காத்திருந்த பயணிகள் வேறு விமானங்களை தேடிச் செல்கின்றனர்.