டெல்லி:வருகிற செப்டம்பர் 18 முதல் 22 வரை புதிதாக திறக்கப்பட்டு உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்றும் மசோதா உள்ளிட்ட பல புதிய மற்றும் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இவ்வாறு சோனியா காந்தி அனுப்பி உள்ள கடிதத்தில், “நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது வருகிற செப்டம்பர் 18 அன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுவதாக நீங்கள் (மத்திய அரசு) அறிவித்து உள்ளீர்கள்.
இந்த சிறப்பு கூட்டத்தொடர் குறித்து மற்ற அரசியல் கட்சிகள் உடன் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதேநேரம், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்த எந்த வித சிந்தனையும் யாருக்கும் இல்லை. ஐந்து நாட்களும் அரசு அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாங்கள் நிச்சயமாக சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்போம். ஏனென்றால், பொதுமக்களின் பிரச்னை மற்றும் முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்” என தெரிவித்து உள்ளார். மேலும், 9 முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை மற்றும் விவாதம் மேற்கொள்ள வேண்டும் எனவும் சோனியா காந்தி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். அவை,
- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுடன் கூடிய தற்போதைய இந்திய பொருளாதார நிலை, உயர்ந்து வரும் வேலைவாய்ப்பின்மை, MSME-க்களின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் இழப்புகளின் அதிகரிப்பு,
- விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் MSP மற்றும் இதர கோரிக்கைகள்
- அதானி வணிகக் குழுமம் மீதான பரிவர்த்தனை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தல்
- மணிப்பூரில் நிலவும் அரசியலமைப்பு சீர்குலைவு மற்றும் சமூக நல்லிணக்கத்தின் சிதைவு, அம்மாநில மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்னை
- சாதிக் கணக்கெடுப்பு குறித்து உடனடி விவாதம்
- மத்திய - மாநில உறவில் இருக்கும் பாதிப்புகள்
- இயற்கை பேரிடர்கள் மற்றும் சில மாநிலங்களில் நிலவும் வறட்சி குறித்தான விவாதம்
- ஹரியானா போன்ற மாநிலங்களில் நிலவும் இனப்பாகுபாடு
- இந்தியாவின் பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்வது குறித்து விவாதம்
இதையும் படிங்க:நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறதா ‘பாரத்’ மசோதா?