டெல்லி:செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். ஆனால், இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் என்னென்ன விவாதிக்கப்படவுள்ளன என்ற விவரங்களை அவர் அறிவிக்கவில்லை.
இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், இந்த சிறப்புக் கூட்டத் தொடர், கேள்வி நேரம் இல்லாமல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் 75வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்தும், ஜி20 மாநாடு குறித்தும், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முழக்கத்தை மத்திய அரசு மீண்டும் கையிலெடுத்துள்ளதால், இது தொடர்பாக சிறப்புக் கூட்டத் தொடரில் மசோதா அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும்.
ஆனால், தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படவுள்ளது. இது சற்று அசாதாரணமானதுதான் என்றாலும் கூட, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏதேனும் அசாதாரண சூழல் நிலவினாலோ அல்லது முக்கியமான கொண்டாட்டங்களுக்காகவோ நாடாளுமன்றத்தில் சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 1962ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்தியா - சீனா போர் நிலவரம் குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு அம்பேத்கரின் 125வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது. கடந்த 1992ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.