டெல்லி:நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 10ஆவது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் அவைக்குள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் குதித்தனர். அந்த நபர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிடிக்க முயன்ற போது அவர்கள் மஞ்சள் நிறத்திலான புகையை தாங்கள் வைத்திருந்த குப்பியில் இருந்து வெளியேற்றினர்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அவைக்குள் புகுந்து இரு நபர்கள் வாயு வெளியேற்றியதால் ஏற்பட்ட பதற்றத்தால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த நபர்கள் வெளியேற்றிய புகை நச்சு புகையாக இருக்குமோ என்ற அச்சமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்தது.
இதனையடுத்து அவை மீண்டும் கூடியபோது, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், வெளியேறியது சாதாரண வாயு என்பதால் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை எனவும் விளக்கம் அளித்தார். நாடாளுமன்றத்தில் நடந்த இந்த அத்துமீறல் சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே நாளில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், திரிமுணால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, பாஜக எம்.பியை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய கல்யாண் பானர்ஜி, “இது பெரிய பாதுகாப்பு குறைபாடு. நரேந்திர மோடி அரசாங்கத்தில் எம்.பிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு முழு தோல்வி அடைந்திருப்பதை இன்றைய சம்பவம் காட்டுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பார்வையாளர் சீட்டு (Visitor Pass) வழங்கிய பாஜக எம்.பி.யைக் காவலில் வைத்து விசாரிகக் வேண்டும்” எனத் தெரிவித்தார்.