டெல்லி: நாட்டின் கோவிட் -19 தடுப்பூசி கொள்கை தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) ஜூன் 16 அன்று ஒரு கூட்டத்தை நடத்துகிறது.
கோவிட் -19 தொற்றுநோய் பரவலின் இரண்டாவது அலைக்கு மத்தியில் நேரடியாக கூடும் முதல் நிலைக்குழு கூட்டம் இதுவாகும். முன்னதாக மே மாதத்தில், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தொற்றுநோய் நிலைமை மற்றும் அரசாங்கத்தின் கோவிட் -19 தடுப்பூசி கொள்கை குறித்து விவாதிக்க கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில் அந்தக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாட்டு மக்களுக்கு ஒரு பயனுள்ள தடுப்பூசி கிடைக்க நாடாளுமன்ற பொது கணக்குக் குழு நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி வாயிலாகவோ சந்திப்பது அவசியம்” எனக் கூறியிருந்தார்.
மேலும், “தடுப்பூசி என்பது இனிவரும் காலங்களில் அத்தியாவசியம் ஆகிவிட்டது. ஆகவே இது தொடர்பாக கொள்கை வகுப்பது அவசியம்” என்றார். முன்னதாக இந்தக் கூட்டம் கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்றது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: நெல் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.72 அதிகரிப்பு!