டெல்லி:விடுமுறை முடிந்து இன்று வழக்கம் நாடாளுமன்றம் கூடியது. ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு நிற அணிந்து வந்தனர். அவை தொடங்கிய சில நிமிடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க் கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் இரு அவைகளையும் சபாநாயகர்கள் ஒத்திவைத்தனர். மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கையாளும் போராட்டம் குறித்து எதிர்க் கட்சிகள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.
இதனிடையே நாடாளுமன்றத்தை நடத்துவது குறித்து மூத்த கேபினட் உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி அலோசனை மேற்கொண்டார். எதிர்க் கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மூன்றாவது வாரமாக நாடாளுமன்றம் முடங்கி காணப்படுகிறது. அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் தாக்கல் செய்த அதானி முறைகேடு குறித்து ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
தொடர்ந்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி விவகாரத்தில் அனைத்து கட்சிகள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கருத்துகளை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி எதிர்க் கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, திமுக எம்.பிக்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க :ராகுல் காந்தி தகுதி நீக்கம்: தொடரும் சங்கல்ப் சத்தியாகிரகம்! கருப்பு பட்டை அணிந்து எம்.பிக்கள் போராட்டம்!