தெலங்கானா மாநிலம்,சூர்யாபேட்டை மாவட்டம், முசி ஆறு அருகே கடந்த அக்டோபர் 19ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஆணின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
தெலங்கானா மாநிலம், கம்மத்தைச் சேர்ந்த க்ஷத்திரிய ராம் சிங் - ராணிபாய் தம்பதிக்கு சாய்நாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராம்சிங் சத்துப்பள்ளியில் உள்ள குடியிருப்புக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சாய்நாத், தனது பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும், பல தவறான பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது.
சாய்நாத், கடந்த நான்கு ஆண்டுகளாக தனது பெற்றோரிடம் பணம் கேட்டு, தினமும் தகராறில் ஈடுபட்டதாகவும், சமீபத்தில் தனது மாமியாரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இப்படி ஒரு மகன் தங்களுக்குத்தேவை இல்லை எனக்கருதிய பெற்றோர், மகனைக்கொல்ல முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நல்கொண்டா மாவட்டம், மிரியாலகுடாவில் வசிக்கும் ராணிபாயின் தம்பி சத்தியநாராயண சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சத்தியநாராயண சிங், தனக்குத்தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் ராமாவத் ரவியிடம் உதவி கோரினார். பணத்திற்காக சாய்நாத்தை கொலை செய்ய ரவி ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் சத்தியநாராயண சிங்கும், ரவியும் இணைந்து கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அன்று சாய்நாத்தை நல்கொண்டா மாவட்டம், கல்லேப்பள்ளியில் உள்ள மைசம்மா கோயிலுக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சாய்நாத்தை கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது உடலை முசி ஆற்றில் வீசிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து அக்டோபர் 19ஆம் தேதி அன்று, முசி ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்குச்சென்ற காவலர்கள் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடந்து மூன்று நாள்கள் கழித்து, ஊடகங்கள் மூலம் இச்செய்தியை அறிந்த பெற்றோர், சாய்நாத்தின் உடலை வாங்கிச்சென்றனர்.
இளைஞரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், சம்பவம் நடந்த நாளன்று அப்பகுதியில் சென்ற கார், சாய்நாத்தின் பெற்றோர் வாங்கிய கார் என உறுதிசெய்யப்பட்டது.
இதுதொடர்பாக சாய்நாத்தின் பெற்றோரை காவலர்கள் விசாரித்தபோது, சாய்நாத் கொலை செய்யப்பட்ட தகவல் வெளிவந்தது. இதுதொடர்பாக சாய்நாத்தின் பெற்றோர் மற்றும் மாமா உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள குற்றவாளியைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியின் பிறப்புறுப்பில் வரும் ரத்தத்தால் திருமண தடை நீங்கும்.. ஆசிரியர், ஜோதிடர் கைது