2020ஆம் ஆண்டுக்கான ஆசிய மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. ஆசியாவில் வளர்ந்துவரும் புவிசார் அரசியல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “ஏற்கனவே உலகம் நெருக்கடிக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்த்திராத கரோனா பெருந்தொற்று நிலைமை மேலும் மோசமாக்கியது.
இதனால் நிறைய நாடுகள் தேசியப் பாதுகாப்பு வரையறையை விரிவுபடுத்தியுள்ளன. பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் சேர்ந்து செயல்பட்டாக வேண்டிய நிலைமையில் இருக்கின்றன. இதன்மூலம் அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல் புதியதொரு அதிகாரச் சமநிலையை நோக்கி உலகம் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலை இவ்வளவு விரைவாக வரும் என்று நினைக்கவில்லை. ஆனால் கரோனா அந்த நிலைக்கு வெகு விரைவாகவே உலகத்தைத் தள்ளியிருக்கிறது.