மைசூரு: தசரா அல்லது நவராத்திரி விழா மைசூரில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழா பல மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்.
கர்நாடகாவில் 1610 இல் தொடங்கிய "நாடா ஹப்பா" (மாநில விழா) என்று கொண்டாடப்படும் இந்த விழாக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக கொண்டாடப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இப்பகுதியின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படும் தசரா பண்டிகையை இன்று (செப் 26) காலை 9.45 மணி முதல் 10.05 மணிக்குள் சாமுண்டி மலையில் உள்ள மைசூரு அரச குடும்பத்தின் குலதெய்வமான சாமுண்டீஸ்வரி தேவியின் சிலைக்கு மலர் தூவி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விழாவை தொடங்கி வைக்கிறார்.
10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், மக்களை கவரும் வகையில் கர்நாடகாவின் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். குடியரசுத்தலைவர் ஒருவர் தசரா விழாவை தொடங்கி வைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காலநிலை மாற்றம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது - பிரதமர் மோடி