கடிவெமுலா: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த குல்சர்கான், சவுதி அரேபியாவில் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2010ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் கடிவெமுலா பகுதியைச் சேர்ந்த, ஷேக் தவுலத்பி என்ற பெண்ணின் செல்போன் எண்ணை தவறுதலாக (Wrong call) தொடர்பு கொண்டுள்ளார். ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை இழந்த தவுலத்பி, ஒரு குழந்தையுடன் பெற்றோருடன் வசித்து வந்தார்.
ராங் காலில் அறிமுகமான குல்சர்கானுக்கும், தவுலத்பிக்கும் பழக்கம் நீடித்தது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2011ம் ஆண்டு சவுதி அரேபியாவிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தார் குல்சர்கான். 2011ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தவுலத்பியை திருமணம் செய்த குல்சர்கான், கடிவெமுலாவில் வசித்து வந்தார். இத்தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடிவெமுலா பகுதியில் ஆதார் அட்டையைப் பெற்ற குல்சர்கான், 5 குழந்தைகள் மற்றும் மனைவியை மீண்டும் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்ல கடந்த 2019ம் ஆண்டு விசா பெற்றார். அங்கிருந்து பாகிஸ்தான் செல்லவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்குச் சென்ற போது, அங்கு ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்ததில், சட்டவிரோதமாக குல்சர்கான் இந்தியாவுக்கு வந்தது கண்டறியப்பட்டது.