இஸ்லாமாபாத் :வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு உள்ள அட்டவணையின் படி ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.
ஐசிசி இதனை நிராகரித்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் அணி இந்தியாவில் உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் மைதானங்கள், வீரர்கள் மற்றும் குழுவினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்புக் குழு இந்தியா வந்து இதுகுறித்த சோதனைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தான் அணிக்கான தூதுக் குழு இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாட வருவதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.