இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, சிறையில் சி வகுப்பு அறை ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், மூட்டைப் பூச்சிகளின் கடியில் சிக்கி உடல் நலன் பாதிக்கக் கூடிய நிலையில் அவர் இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது, வெளிநாட்டுப் பயணங்கள், உலக நாடுகள் தலைவர்களுடனான சந்திப்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது வழங்கப்பட்ட விலையுயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டப் பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தனிப்பட்ட முறையில் முறைகேடாக விற்றதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு தெரிவித்தது.
அரசு கருவூலத்திற்கு வரும் பரிசுப்பொருட்களை பேணிக் காக்கும் பணியை தோஷகனா துறை மேற்கொண்டு வரும் நிலையில், இம்ரான் கான் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த இஸ்லாமாபாத்தை தளமாக கொண்ட மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஹுமாயுன் திலவர் இம்ரான் கானை குற்றவாளி என அறிவித்தார்.
மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 1 லட்ச ரூபாய் அபராதத்தை கட்டத் தவறினால் இம்ரான் கானுக்கு 6 மாதங்கள் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கக் கோரி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து இம்ரான் கானை கைது செய்த போலீசார், பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் நகரில், உள்ள சிறையில் அடைத்தனர். வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பான ஆவணங்களில் இம்ரான் கானிடம் கையெழுத்து வாங்க, அவரது வழக்கறிஞர் பஞ்சோதா அட்டோக் சிறைச்சாலைக்குச் சென்றார்.