பத்ம விபூஷண் விருதை பெறும் நபர்கள்:
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே - பத்ம விபூஷண்
ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் ஷின்சோ அபே. இந்தியாவுடன் சிறந்த நட்பு கொண்டிருந்தார். பொது வாழ்க்கையில் சிறப்பான சேவை ஆற்றியதற்காக ஷின்சோ அபேவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பெல்லே மொனப்பா ஹெக்டே - பத்ம விபூஷண்
82 வயதான பெல்லே மொனப்பா ஹெக்டே, மருத்துவத் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் இதுவரை 35 புத்தகங்களை ஹெக்டே எழுதியுள்ளார். இவருக்கு ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டில் நாட்டின் மூன்றாவது மிக உயரிய சிவில் விருதான பத்ம பூஷண் விருதும், கடந்த 1999இல் பி.சி. ராய் விருதும் வழங்கப்பட்டது.
மறைந்த நரிந்தர் சிங் கபானி - பத்ம விபூஷண்
இந்திய அமெரிக்க விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோரான நரிந்தர் சிங் கபானி, கடந்த 1961இல் பைபர் ஆப்டிக்ஸ் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இவரை பைபர் ஆப்டிக்ஸின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இன்றைய அதிவேக இணைய தொழில்நுட்பத்திற்கு அடித்தளம் அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர். கடந்தாண்டு, டிசம்பர் மாதம் கலிஃபோர்னியாவில் கபானி காலமானார்.
மவுலானா வஹிதுதீன் கான் - பத்ம விபூஷண்
ஆன்மீகத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக, மௌலானா வஹிதுதீன் கானுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் குரானுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 1925இல் பிறந்த இவர், நவீன அறிவியல் நிபுணராகவும் வலம் வருகிறார். சிறந்த காந்தியவாதியான இவர், உருது மொழியில் 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
பி.பி. லால் - பத்ம விபூஷண்
ராம் ஜன்மபூமி தளத்தில் அகழ்வாராய்ச்சிக் குழுவை வழிநடத்திய பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் பிரஜ் பாசி லாலுக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராமாயண தலங்களில் பணியாற்றியது மட்டுமின்றி, சிந்து சமவெளி, ஹஸ்தினபுரம் உள்ளிட்ட மகாபாரத தலங்களிலும் லால் பணியாற்றியுள்ளார். இவர், ஏற்கனவே கடந்த 2000இல் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளார்.
சுதர்ஷன் சாஹூ - பத்ம விபூஷண்
ஒடிசாவின் புகழ்பெற்ற சிற்பி சுதர்சன் சாஹூ, கடந்த 1977இல் பூரியில், சுதர்ஷன் கிராஃப்ட்ஸ் மியூசியத்தை உருவாக்கி பிரபலமானார். ஒடியா சிற்பப் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதில் இவரின் பங்களிப்பைப் பாராட்டி, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு, ஏற்கனவே கடந்த1988இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தருண் கோகோய் - பத்ம பூஷண்
கடந்த 1936ஆம் ஆண்டு பிறந்த தருண் கோகோய், அசாம் மாநிலத்தில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றவர். ஆறு முறை மக்களவை உறுப்பினராக இருந்த தருண் கோகோய், பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு(2020) நவம்பர் மாதத்தில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.