எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது
21:08 January 25
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது பட்டியல் இன்று வெளியானது. அதன்படி, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மருத்துவர் பெல்லோ மோனப்பா ஹெக்டே, நரிந்தர் சிங் கபானி, மவுலானா வஹிதுதீன் கான், பிபி லால், பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷண் விருது நாட்டின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருதாகும். பத்ம விருதுகள் 1954ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.
இந்த விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, சமூகப்பணி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், பொதுவிவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.