ஹைதராபாத்:நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர் டி ராஜா சிங்கை மீண்டும் நேற்று (ஆகஸ்ட் 25) ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து இன்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, வெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியான முறையில் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், முகமது நபியைப் பற்றிய கருத்துக்காக பாஜக தலைவர் டி ராஜா சிங்கை கைது செய்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் "பெரிய கோரிக்கை" நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்து கூறியதற்காக தெலங்கானாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து ராஜா சிங் தடுப்புக் காவல் சட்டத்தின் (PD Act) கீழ் கைது செய்யப்பட்டு, செரியாப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை ஹைதராபாத் காவல்துறை உறுதிபடுத்தியது.
இது குறித்து ஓவைசி கூறுகையில், "நாட்டின் நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடிய கோஷங்கள் எதையும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு எழுப்ப வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
101 குற்ற வழக்குகள் :"எங்கள் மிகப்பெரிய கோரிக்கை அவரை கைது செய்ய வேண்டும் என்பதே, அக்கோரிக்கை PD சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைதியான வெள்ளிக்கிழமை தொழுகையை உறுதி செய்ய அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார். காவல்துறை அளித்த தகவலின் படி, "18 வகுப்புவாத குற்றங்களில் ஈடுபட்ட ராஜா சிங் மீது 101 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.