டெல்லி:தலைநகரான டெல்லி, கடந்த இரண்டு வாரங்களாக புகையால் சூழப்பட்டு, காற்று மாசுபாடு அதிகரித்து மிக மோசமான நிலையை அடைந்து காணப்பட்டது. காற்றின் தரக்குறியீடு 450க்கும் மேல் சென்று அபாயகரமான சூழல் ஏற்பட்டது. இதனால் காற்றின் மாசுபாடை கட்டுக்குள் கொண்டு வர உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும், பல்வேறு வகையில் போக்குவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்தது. மேலும், பொதுமக்கள் வெளியில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என வலியுறுத்தியது. இந்நிலையில், இன்று (நவ.10) காலை டெல்லியில் லேசான மழை பெய்தது. இதனால் புகையால் சூழப்பட்டிருந்த டெல்லி தெளிவாக காட்சியளித்தது.
இன்று காலை 7 மணியளவில் காற்றின் தரக்குறியீடு என் 437-லிருந்து கனிசமாக குறைந்து 408 அளவை எட்டியுள்ளது. மேலும், மழை பெய்தால் இன்னும் காற்றின் தரக்குறையீடு குறையும் என கூறப்படுகிறது. முன்னதாக, தீபாவளி நெருங்கும் நாட்களில் மழை பெய்து காற்றின் தரம் சற்று உயர்ந்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டிசிஷன் சப்போர்ட் சிஸ்டத்தின் தரவுகளின்படி, டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் வயல்வெளியில் ஏற்பட்ட தீ காரணமாக கடந்த புதன்கிழமை டெல்லியில் 38 சதவீதமும், நேற்று 33 சதவீதமும் காற்று மாசு ஏற்பட்டது என கூறியுள்ளனர்.