ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் மாவட்டத்தின் பாக்மாராவில் உள்ள பிசிசிஎல் நிலக்கரி நிறுவனத்தின், நுழைவு வாயில்-2 பகுதியில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியில் இருந்தனர். அப்போது, 30-40 பேர் அடங்கிய கும்பல், நிலக்கரியை திருடிச் செல்வதை காவலர்கள் பார்த்துள்ளார்கள். திருடர்களைத் தடுக்க காவலர்கள் சென்றபோது, அந்த கும்பல் சிஐஎஸ்எஃப் வீரர்களின் ஆயுதங்களைப் பறிக்க முயன்று, அவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருடர்களின் தாக்குதலை அடுத்து, சிஐஎஸ்எஃப் வீரர்கள் தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்டியடித்துள்ளனர். திருடர்களின் தாக்குதலில், காவலர்கள் எம்.கே.சௌகான் மற்றும் சி.எஸ்.பாண்டே ஆகியோர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரையும், ரயில் தண்டவாளத்திற்கு இடையே திருடர்கள் இழுத்துச்சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பாக்மாரா போலீஸ் மற்றும் சிஐஎஸ்எஃப் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிஐஎஸ்எஃப் தளபதியும் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் மற்றும் பிறரிடம் சம்பவம் குறித்து விசாரித்தார்.