நாட்டில், ஜனவரி 16ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுகாதாரத்துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் உலகிலேயே விரைவாக தடுப்பூசி போடும் நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கடந்த 21 நாள்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாடு, இந்தியா. கிட்டத்தட்ட 54 லட்சத்து 16 ஆயிரத்து 849 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.