தெலங்கானா மாநிலம், மஹபூபாத் மாவட்டத்தில் உள்ள சனிகாபுரம் கிராமத்தில், கொத்துக் கொத்தாக குரங்குகளைக் கொன்று, அவற்றை சாக்குப்பைகளில் அடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மலையடிவாரத்தில் வீசிச் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு சனிகாபுரம் கிராம மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொல்லப்பட்டவை சிமியன் எனப்படும் மனிதக் குரங்கு வகையைச் சேர்ந்த குரங்குகளாகும். மேலும், கொல்லப்பட்ட குரங்குகளில் பெரும்பாலானவை குட்டிகள் ஆகும். மிகவும் அழுகிய நிலையில் குரங்குகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சோதனையில், குரங்குகள் இறந்து ஐந்து முதல் ஆறு நாள்கள் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல் துறையினரின் உதவியுடன் வனத் துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்துப் பேசிய மாநில வனத்துறை அலுவலர் கிருஷ்ணமாச்சார்யலு, சிமியன் வகைக் குரங்குகள் மீதான இத்தகைய வன்முறைத் தாக்குதலை தன்னுடைய இத்தனை ஆண்டுகள் பணி வாழ்க்கையில் பார்த்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.