டெல்லி :கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் 13 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஒ பிரையன் இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (டிச. 18) மக்களவை வழக்கம் போல் கூடிய நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், திரிணாமூல் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி, சுகதா ராய் உள்பட 31 பேர் நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், கே. ஜெயகுமார், அப்துக் காலிக் ஆகியோர் சபாநாயகர் இருக்கை அருகே அமளியில் ஈடுபட்டதாக முன்னுரிமைக் குழுவின் அறிக்கை வரும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.