தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பதன்சேருவில் வறண்ட நிலப் பகுதிக்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (இக்ரிசாட்) 50ஆவது ஆண்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இக்ரிசாட்டின் தாவரப் பாதுகாப்பு குறித்தப் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், இக்ரிசாட்டின் துரித உற்பத்திக்கான நவீன மையம் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த இரண்டு மையங்களையும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க சஹாராவின் சிறு விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "நீர் மற்றும் நில நிர்வாகம், பயிர்வகையில் மேம்பாடு, பலவகை வேளாண் கருவிகள் மற்றும் கால்நடை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இக்ரிசாட் பங்களிப்பு அளப்பறியது. இந்த அமைப்பின் ஆராய்ச்சியும், தொழில்நுட்பமும் வேளாண்மையை எளிதாக்கவும், நீடித்ததாக்கவும் மாற்ற உதவி செய்துள்ளன.
பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவோர் குறைந்தபட்ச ஆதார வளங்களுடன் வளர்ச்சியின் கடைசி நிலையில் இருக்கும் மக்கள்தான். எனவே, பருவநிலை மாற்றத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துவது உலகிற்கு அவசியம்.