பாலசோர் (ஒடிசா):ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, சேதம் அடைந்த ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, 51 மணி நேரத்துக்கு பிறகு விபத்து நடந்த இடம் வழியாக மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. முதற்கட்டமாக அந்த மார்க்கத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி உத்தரவை தொடர்ந்து, சேதம் அடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. சேதம் அடைந்த 2 தண்டவாளங்கள் மறுசீரமைக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. 51 மணி நேரத்துக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இத்துடன் எங்கள் கடமை முடியவில்லை. இந்த விபத்தில் பலர் குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டனர். காணாமல் போன அவர்களை கண்டுபிடித்து, மீண்டும் குடும்பத்திடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தற்போது அந்த பணியில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்" என கூறினார்.