டெல்லி:டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அனில் சவுத்ரி, காங்கிரஸ் சேவா தளம் தலைவர் லால்ஜி தேசாய் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய லால்ஜி தேசாய், "நாங்கள் நடத்தி வரும் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தொலைவிலான யாத்திரை நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்துவது, அரசியல் சார்ந்தது அல்ல. சபர்மதி ஆசிரமத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய யாத்திரை, நாளை டெல்லி ராஜ்காட் பகுதியில் நிறைவடைகிறது.
நாட்டு மக்களின் சுதந்திரத்தையும், ஒற்றுமையினையும் பறைசாற்றும் விதமாகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே யாத்திரை நடத்தப்பட்டது. இந்த யாத்திரை கோடை காலத்திலும் மக்களுடன் உரையாட வாய்ப்பளித்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது அனைத்து இந்தியர்களும் ஒன்றாக இருந்தனர். இப்போது அனைவரும் பிளவுபட்டு இருக்கின்றனர் என்று மக்கள் கூறினார்கள். 75 ஆண்டு கால சுதந்திரம் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். அதேநேரம் சுதந்திரப் போராட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது அவசியம்" என்று கூறினார்.
டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி பேசுகையில், "75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இதுபோன்ற சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். நாட்டு மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அவர்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறோம். நாளை டெல்லி ராஜ்காட் பகுதியில் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!