சென்னை:ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், " மோடி அரசு, ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் கண்டு அச்சப்படுகிறது.
ஜனநாயகத்தைக் கொன்று, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து, உண்மையைப் பேசுபவர்களின் வாயை அடைக்க நினைக்கிறது. இந்த சர்வாதிகாரத்தை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். ஜனநாயகத்தை காக்க சிறைக்கு கூட செல்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். அவர் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதலாகும். எனக் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய இலக்காக மாறி உள்ளனர்.
ஒருபக்கம் கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுகின்றனர். மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது சுதந்திர கருத்துகளை கூற தகுதியற்றவர்களாக கட்டமைக்கப் படுகின்றனர். ஜனநாயகத்தில் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளார்.