டெல்லி: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள எம்.பி.க்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம்.
இந்தநிலையில் பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யாரை அறிவிப்பார்கள் என்றும்; அதேவேளையில் எதிர்க்கட்சியினர் யாரை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மார்க்சிஸ்ட் விமர்சனம் :இந்தநிலையில் குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க கூறி, திமுக உள்ளிட்ட 22 கட்சித்தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஏற்கெனவே குடியரசுத்தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவை நியமித்துள்ளனர். அவரும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், மம்தாவின் கடிதம் எதிர்க்கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உள்ளது. அவ்வாறு இருக்கையில் மம்தாவின் கடிதம் ஒருதலைபட்சமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம் செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், "ஜூன் 15 அன்று ஒரு கூட்டம் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவிடம் பொறுப்பை ஒப்படைத்து, மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மம்தா பானர்ஜி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் கூட்டத்தை கூட்டியுள்ளார். இது ஒருதலைப்பட்சமாக உள்ளது. மம்தாவின் செயல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாமல் இருக்க, பாஜகவுக்கு உதவும் முயற்சியாக உள்ளது" என்று விமர்சனம் செய்தார்.