டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் உரையாற்றிய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 3வது நாள் விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது இரட்டை இலக்க பணவீக்கம், ஊழல், கொள்கை முடக்கம், நிலைத்தன்மையற்ற சூழல், வேலையின்மை, வன்முறை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றின் உத்தரவாதமாகும் என்றும் அதேநேரம் எனது மூன்றாவது பதவிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்பது உத்தரவாதம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வெளியே சென்றவர்களிடம் மட்டும் கேளுங்கள் கச்சத்தீவு என்றால் என்ன? மற்றும் அது எங்கே அமைந்துள்ளது? என்று. திமுக அரசின் முதலமைச்சர் எனக்கு கடிதம் எழுதுகிறார், மோடி ஜி கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று. அது ஒரு தீவு ஆனால் அதை வேறு நாட்டுக்கு கொடுத்தது யார்? அது மா பாரதியின் ஒரு பகுதியாக இல்லையா என்றும் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது உங்கள் இந்திரா காந்தியின் தலைமையில் நடந்தது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 1966ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி, மிசோரமில் ஆதரவற்ற பொது மக்கள் மீது காங்கிரஸ் அரசு விமானப் படை தாக்குதல் நடத்தியது. சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தியது வேறு நாட்டின் விமானப் படையா என்பது குறித்து காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.