ஐதராபாத் :பீகார் தலைநகர் பாட்னாவில் நாளை (ஜூன் 23) அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு வரிசையில் கொண்டு வரும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லி, மேற்கு வங்கம், தமிநாடு, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்ளை சந்தித்து ஆலோசனை நடத்திய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், நாளை ஜூன் 23ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக பாட்னா விரைந்த மேற்கு வங்க முதலமைச்சர் ம்மதா பானர்ஜிக்கு, முதலமைச்சர் நிதிஷ் குமார் வரவேற்றார். இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்பட்டது. தலைநகர் டெல்லியில் நிர்வாக அதிகாரத்தை பிரிக்கும் தொடர்பான மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நாளை (ஜூன் .23) பாட்னாவில் நடக்கும் எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்போம் என ஆம் ஆத்மி கூறியதாக தகவல் பரவியது.