பெங்களூரு : காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியை 'தேசபக்தி ஜனநாயக கூட்டணி' என பெயர் மாற்றத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டு உள்ள நிலையில், பெங்களூருவில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பெயர் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் தகவல் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக, உள்ளிட்ட 24 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த புதிய கூட்டணியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று அழைப்பதற்கு பதிலாக வேறு ஒரு புதிய பெயர் சூட்ட தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இரண்டாவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி பெயர் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயர் மாற்றம் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளிடம் கேட்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், அனைத்து முடிவுகளையும் எடுக்க உள்ளதாகவும், கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார்.
மேலும் பெயர் மாற்றம் குறித்த முடிவில் காங்கிரஸ் மட்டும் தனித்து நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து ஒற்றுமையாக முடிவெடுக்க உள்ளதாகவும் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், பல்வேறு கட்சிகள் தேசபக்தி ஜனநாயக கூட்டணி எனப் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் மாற்றம் குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் சிம்லாவில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் அடுத்த மாதம் 3-வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சித்தாந்தங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையில் இந்த கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த கூட்டணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெயர் இருக்க வேண்டும் எனப் பல்வேறு கட்சிகள் விரும்புவதாகத் தகவல் கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி, பீகாரில் உள்ள மகாகட்பந்தன் போன்று தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் ஜனநாயகம் அல்லது மக்கள் சார்ந்த தலைப்புகளில் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள் கூட்டணியில் இணைந்தன. தற்போது பெங்களூருவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டணி பெயர் மாற்றம், தேர்தல் யுக்திகள், தேர்தல் வழிகாட்டு முறைகளை வகுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக் குழு அமைப்பது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!