தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தில் திமுக பங்கெடுக்கும் - ஸ்டாலின் - எதிர்கட்சிகளின் 11 அம்ச கோரிக்கைகள்

மத்திய அரசைக் கண்டித்து வரும் செப். 20ஆம் தேதிமுதல் செப். 30ஆம் தேதிவரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

DMK supports the joint statement
DMK supports the joint statement

By

Published : Aug 21, 2021, 6:27 AM IST

Updated : Aug 21, 2021, 6:32 AM IST

டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடனும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்று (ஆக. 20) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 19 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், தவிர்க்க இயலாத காரணத்தால் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் உரை

இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், "மாநிலங்களின் உரிமைகள் மீது பாஜக வைத்திருக்கும் குறைந்த மரியாதை காரணமாக கூட்டாட்சி தத்துவம் அழிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பது அவசியம்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டது. அது வலுவாக வளர வேண்டும்" என்றார்.

11 நாள்கள்... 11 கோரிக்கைகள்...

இக்கூட்டத்திற்குப் பிறகு 19 கட்சித் தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், 11 அம்ச கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டு, அக்கோரிக்கைகளை வலியுறுத்திவரும் செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நாடு தழுவிய அளவில் தர்ணா, ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளன.

கோரிக்கைகள்:

  1. கரோனா பரவலைத் தடுக்கும் முனைப்பில் நாடு முழுவதும் தடுப்பூசித் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
  2. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், வருமான வரி வரம்பின்றி அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும்.
  3. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசிய பொருள்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக கலால் வரியை நீக்கி, இவற்றின் விலையேற்றத்தைக் குறைக்க வேண்டும்.
  4. மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்துசெய்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்ய வேண்டும்.
  5. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் போக்கை நிறுத்த வேண்டும்.
  6. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுமலர்ச்சிக்கு கடன்களை வழங்காமல், ஊக்கத்தொகை தொகுப்புகளை வழங்க வேண்டும்.
  7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், வேலை நாள்களை 200 ஆக உயர்த்தி, குறைந்தபட்சம் ஊதியத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.
  8. கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்களுக்குத் தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  9. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
  10. பீமா கோரேகான் வழக்கு, சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் வழக்கு ஆகியவற்றில் உபா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். சிறையில் இருக்கும் ஊடகவியலாளர்களை விடுவிக்க வேண்டும்.
  11. ஜம்மு காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவித்து, வெளிப்படைத்தன்மையுள்ள தேர்தலை நடத்த வேண்டும்.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது, பொது கருத்துகள் மூலம் பாஜகவுக்கு எதிரான திட்டத்தை வகுப்பது போன்ற முன்னெடுப்புகளை நோக்கி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பேஸ்புக் பதிவு நீக்கம்!

Last Updated : Aug 21, 2021, 6:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details