புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் தற்போது 14ஆக உள்ளது.
புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மனு! - Opposition parties in Pondicherry
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிக்கு (நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்பட) உறுப்பினர்களின் எண்ணிக்கை சம பலத்துடன் இருப்பதால், பெரும்பான்மையை நிரூபிக்க, எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கடிதம் அளித்தனர்.
இதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர். காங்கிரஸ் (7), அதிமுக (4), பாஜக (நியமன உறுப்பினர்கள் மூவர்) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் உள்ளனர். இதனை அடுத்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் சட்டப்பேரவை பலம் சமமாக இருப்பதால், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று தாங்கள் கையெழுத்திட்ட கடிதத்தை துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி பலம் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாலும், எதிர்க்கட்சி வரிசையில் 14 பேர் உள்ளதாலும் சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.