டெல்லி:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. அதற்கு ஒரு நாள் முன்னதாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது தொடர்பான கொடூர காட்சிகள் இருந்தன. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்கட்சிகளின் கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்கத் தயார் என மத்திய அரசு கூறியது. ஆனால், இதுவரை விவாதிக்கப்படவில்லை. இதனால், மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாள்தோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று (ஜூலை 26) பிரதமருக்கு எதிராக மக்களவையில் எதிர்கட்சி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.
இதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.