டெல்லி : நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் அதன் தலைவர் பிரிஜ்லால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் சிறை சீர்திருத்த மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை விவகாரங்களில் மணிப்பூர் கலவரம் குறித்தும் விவாதிக்கபட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் தெரீக் ஒ பிரென், காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், மற்றும் பிரதீப் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டு கடிதத்தை நிலைக் குழு தலைவர் பிரிஜ்லாலிடம் தாக்கல் செய்தனர்.
மேலும், அந்த கடிதத்தில் உள்துறை விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் என்ற வகையில், மணிப்பூர் கலவரம் தொடர்பான விஷயத்தை மிக அவசரமாகவும், நேர்மையாகவும் விவாதிக்க வேண்டியது தார்மீக மற்றும் அரசியலமைப்பின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உள்துறை விவகாரங்களுக்கான விவாதத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பேச நிலைக் குழு தலைவர் பிரிஜ்லால் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்த போது, அது குறித்து விசாரிக்கவும், பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த போதும் பிரிஜ்லால் அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து உள்துறை விவகாரங்களுக்கான விவாதத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாதத்தில் இரண்டு முறை நாடாளுமன்ற நிலைக்கு குழு கூட்டம் கூட்ட திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், அந்த கூட்டங்களை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பை கோர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இதையும் படிங்க :அவுரங்கசீப் லேன் பெயர் மாற்றம்.. அப்துல் கலாம் லேன் என மாற்றம்!