தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி - திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், விஜய் வசந்த் என 33 பேர் இடைநீக்கம்!

opposition members suspended in lok sabha: நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 31 பேர் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

opposition members  suspend in lok sabha
opposition members suspend in lok sabha

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 3:51 PM IST

Updated : Dec 18, 2023, 7:31 PM IST

டெல்லி :கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில், அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் குதித்து இருவர் களேபரத்தில் ஈடுபட்டனர்.

அந்த இரண்டு பேரையும் பிடித்து எம்.பிக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார், அடுத்தடுத்து இரண்டு பேரை கைது செய்தனர்.

6 பேரும் சட்டவிரோத தடுப்பு உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக சிஆர்பிஎப், டி.ஜி அனிஷ் தயால் சிங் தலைமையில் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது.

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சபாநாயகர் ஓம் பிர்லா மறு உத்தரவு வரும் வரை மக்களவை பார்வையாளர்கள் பகுதியில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து அனைத்து கட்சி எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதினார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மீண்டும் அவை கூடிய நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 13 மக்களவை எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. என மொத்தம் 14 பேர் நடப்பு குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (டிச. 18) அவை வழக்கம் போல் கூடிய நிலையில், பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் உறுபினர்கள் மக்களவையில் பதாகைகளை கையில் ஏந்தி தொடர் அமளியில் ஈடுபட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு தொடர் இடையூறு ஏற்படுத்தியதாக கூறி நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 33 பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா உள்பட 31 பேர் நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், கே. ஜெயகுமார், அப்துக் காலிக் ஆகியோர் முன்னுரிமைக் குழுவின் அறிக்கை வரும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

33 எம்.பிக்கள் இடைநீக்கம் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தாக்கல் செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் 46 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க :81 கோடி இந்தியர்களின் ஆதார், பாஸ்போர்ட் தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததா?! வீடியோ கேம் சகவாசத்தால் விபரீதம்! 4 பேர் கைது! என்ன நடந்தது?

Last Updated : Dec 18, 2023, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details