பாட்னா:வருகிற 2024 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில், நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒருங்கிணைத்து உள்ளனர்.
இந்த நிலையில், பிகார் மாநிலத்தின் பாட்னாவில் இந்த எதிர்கட்சிகள் கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெறுகிறது. இந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நேற்று முதலே முக்கிய அரசியல் பிரமுகர்கள் பாட்னாவில் முகாமிடத் தொடங்கினர்.
முக்கியமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் பாட்னா புறப்பட்டுச் சென்றார். அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை நிதீஷ்குமார் வரவேற்றார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சரத் பவார் புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக, முக்கியமான எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழலால், இரண்டு முறை இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், நிதீஷ் குமாரின் தீவிர முயற்சியால் தற்போது இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.