பாட்னா :2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க ஜூன் 12ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை ஜூன் 12 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் மன்ஜித் சிங், பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டம் வருகிற ஜூன் 12ஆம் தேதி நடைபெறும். அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரு செய்தியை அனுப்பும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் விதமாக அந்த கூட்டம் இருக்கும்.
தற்போதைக்கு காங்கிரஸ், டெல்லி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோரை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வைப்பதே பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் மீது நம்பிக்கை இல்லை என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கேசிஆர் ஆகிய இரு தலைவர்களும் கடந்த 8 முதல் 9 ஆண்டுகளில் பாஜகவுக்கு உதவி வருவதாக தெரிவித்தார். காங்கிரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் முழுப் பொறுப்புணர்வோடு, கெஜ்ரிவாலையும், கே.சி.ஆரையும் இன்னும் நம்ப முடியவில்லை" என்றார்.
அண்மையில் மாநில கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் முயற்சியில் டிஆர்எஸ் கட்சியை பிஆர்எஸ்-ஆக மாற்றியதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்த கே.சி.ஆர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :Rahul Gandhi : ராகுல் காந்தி திடீர் அமெரிக்கா பயணம்... கசிந்தது ரகசியம்!