காங்கிரஸ் தலைமையில் 15 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் கூட்டத்தொடரை முடக்கிவருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 15 எதிர்க்கட்சிகள் காலையில் ஆலோசனை நடத்தின. இதில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
காங்கிரசுடன், திமுக, திருணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாடு கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் பங்கேற்றன.
127ஆவது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு
நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு 127ஆவது அரசியல் சட்டத் திருத்தத்த மசோதாவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆதரவு தர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.