டெல்லி: அதானி குழுமம் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டேன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், அதானி குழுமம் முறைகேடு செய்து பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை உயர்த்தியதாகவும், பல வெளிநாட்டு நிறுவனங்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலியான நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாகவும் குறிப்பிட்டப்பட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கெளதம் அதானியின் அதானி குழுமம் மீதான இந்த பகீர் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் இதுவரை வாய்திறக்கவில்லை.
இந்த நிலையில், இன்று(பிப்.2) நாடாளுமன்றத்தில் ஹிண்டேன்பர்க் அறிக்கை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ், ஆம்ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் முடிவு செய்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறும்போது, "அதானியின் மோசடிகளும், முறைகேடுகளும் மலைபோல் குவிந்துள்ளன. இதனால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எல்ஐசி, எஸ்பிஐ ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்துள்ளதால், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயில் முதலீடு செய்தவர்களும் கவலையில் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்.