தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Operation Lotus: காங்கிரஸை கண்டுகொள்ளாத திமுக - பாஜக கனவு நனவாகுமா? - bjp

புதுச்சேரி திமுக எம்எல்ஏ தனது கூட்டணிக் கட்சியின் ஆட்சி கவிழும் நிலையில், பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சியளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது தலைமையிடம் கூறிவிட்டுதான் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

lotus operation in pudhucherry
lotus operation in pudhucherry

By

Published : Feb 21, 2021, 9:34 PM IST

காங்கிரஸ் இல்லா பாரதம் எனும் பாஜகவின் கனவு நனவாகிவருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் தங்களால் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதை பாஜக வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு உதாராணமாக அஸ்ஸாம், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் தற்போது புதுச்சேரி இணைந்துள்ளது.

காங்கிரஸ் இல்லா பாரதம்:

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஜனவரி 25ஆம் தேதி புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம் இந்த முடிவை எடுத்தார். அவருக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சி தலைவர்கள் டார்ச்சர் கொடுப்பதாகவும், தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை எனவும் நமச்சிவாயம் வேதனை தெரிவித்திருந்தார். இவர்களைத் தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். பதவியை ராஜினாமா செய்தவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், இது பாஜகவின் செயல் என்பதே ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த சூழலில், இன்று (பிப். 21) ராஜ் பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கிரண் பேடி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்ற நாள் முதல் முதலமைச்சர் நாராயணசாமி அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தார். தங்கள் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக காங்கிரஸ் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. கிரண்பேடியுடன் போராட்டம் நடத்துவதில் செலுத்திய கவனத்தை, தனது கட்சி மீது செலுத்த தவறிவிட்டார் நாராயணசாமி. அதன் விளைவாக புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.

30 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில், காங்கிரஸின் பலம் 12ஆக குறைந்துள்ளது, எதிர்க்கட்சிகளின் பலம் 14ஆக உள்ளது. நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் ஆளும் காங்கிரஸ் உள்ளது. நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்வார் என்பதே அரசியல் நோக்கர்கள் பார்வையாக உள்ளது.

கதையில் எதிர்பாராத ட்விஸ்ட்:

இந்தியா முழுவதும் காங்கிரஸை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக தொடர்ச்சியாக வெற்றிகண்டு வருகிறது. ஆனால், இன்று புதுச்சேரியில் திமுக எம்எல்ஏ வெங்கடேஷன் ராஜினாமா செய்ததுதான் எதிர்பாராத திருப்பமாக உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் தரப்பினரிடையே அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏதும் பாதிப்பு இருக்குமா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தமிழ்நாட்டில் இரு கட்சியினரிடமும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் சொல்வது போல் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதாக இருந்தால், திமுக எம்எல்ஏவின் ராஜினாமா புரியாத புதிராக இருக்கிறது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால், புதுச்சேரி திமுக எம்எல்ஏ தனது கூட்டணிக் கட்சியின் ஆட்சி கவிழும் நிலையில், பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சியளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது தலைமையிடம் கூறிவிட்டுதான் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகுதான் தெளிவான முடிவு தெரியும். அதுவரை பொறுத்திருப்போம்...

ABOUT THE AUTHOR

...view details