டெல்லி: சூடானில் கடந்த 2021ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத் தளபதி பர்ஹானும், துணை ராணுவப் படை தலைவர் டக்லோவும் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்கள் இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த வாரம் ராணுவப் படையினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரு படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. தலைநகர் கார்ட்டூம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எல்லா பகுதிகளிலும் குண்டு மழை பொழிகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால், சூடானில் சிக்கியுள்ள தங்கள் மக்களை மீட்கும் பணிகளில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.