டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களில் 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் நேற்று (மே 5) தெரிவித்தனர்.
காவல்துறையினரின் புள்ளிவிவரங்களின்படி ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும், ஒரு காவலர் கரோனாவால் பாதிக்கப்படுகிறார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 25 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். ஜனவரி மாதத்தில் 34 காவலர்கள் இந்த கொடிய வைரஸால் உயிரிழந்துள்ளனர். கரோனா காரணமாக மொத்தம் 59 காவலர்கள் உயிர் இழந்துள்ளனர்.
லெப்டினன்ட் கவர்னர், முதலமைச்சர், வி.வி.ஐ.பிகள் ஆகியோரின் இல்லங்களில் பி.எஸ்.ஓ.க்களாக இருந்த பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 145 காவலர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் நியமிக்கப்பட்ட 65 காவலர்கள் கூட கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே அதிக எண்ணிக்கையிலான காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டமாகும். காவலர் பயிற்சி பள்ளிகள், குற்றப்பிரிவு, சிறப்பு செல், ராஷ்டிரபதி பவன் ஆகியவற்றிலிருந்தும் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் கண்டறியப்பட்டு வருகின்றனர்.