டெல்லி:'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் டெல்லியில் இன்று (செப்.23) நடைபெற்றது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனை இன்று இந்தியா கேட் அருகே நடைபெற்றது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தியா கேட் அருகே ஜோத்பூர் அதிகாரிகள் விடுதியில் 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' உறுப்பினர்களுடன் விரிவான விவாதம் நடத்தியதாகவும், மேலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக உத்திகள் வகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைத்து தேர்தல் தொடர்பாக கருத்துகள் கேட்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' தொடர்பாக அரசியலமைப்பு வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவது தொடர்பாகவும், ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் வரும் சூழ்நிலைகளுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.