குவாலியர்:கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து விட்டார். இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 5 பெண் மற்றும் 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கிப் புலிகளை பிரதமர் திறந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த பிப்ரவரி 12 அன்று 7 ஆண். 5 பெண் என மொத்தம் 12 சிவிங்கிப் புலிகளை மத்தியப்பிரதேச முதலமைச்சர் அதே குவாலியரில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் திறந்து விட்டார். இந்த நிலையில், அனைத்து சிவிங்கிப் புலிகளும் நவீன தொழில்நுட்பங்கள் உடன் சிறப்பு குழுவினரின் கீழ் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 14) சூரஜ் என்ற ஆண் சிவிங்கிப் புலி உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை உயிரிழந்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது உயிரிழந்து உள்ள சூரஜ் என்ற ஆண் சிவிங்கிப் புலி கடந்த ஜூன் 25 அன்று, தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து வனத்திற்குள் திறந்து விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிவிங்கிப் புலியின் உடலை நேற்று காலை வன ரோந்துப் பணியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்த சூரஜ் சிவிங்கிப் புலியின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.